தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேங்காய் வியாபாரியான பரமேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரியான பரமேஸ்வரிக்கும் அப்பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் தட்டிக்கேட்க சென்றபோது அகல்யாவின் கணவரான தமிழ்ச்செல்வன், உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் இணைந்து பரமேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த பரமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமேஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வன் உள்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.