திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் கோலாகலமாக திருவிழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே ஊராளிபட்டியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஊர்வலமாக மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன், தீவட்டி பரிவாரம் கோவிலில் உள்ள மந்தைக்கு அம்மன் வந்தடைந்தது. அதன் பின் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து மறுநாள் அக்னிசட்டி, பால்குடம், மாவிளக்கு ஆகியவை எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வர்ணக்குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் நேற்று முன்தினம் மாலையில் பூஞ்சோலை சென்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவிற்கான முன் ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.