புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முரண்டாம்பட்டியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களாக சண்முகம் பொன்னமராவதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் இதய மற்றும் நுரையீரல் பாதிப்பு சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று காலை திடீரென சண்முகம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸில் முரண்டாம்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் முரண்டாம்பட்டி அருகே சென்ற போது சண்முகம் மயங்கி நிலையில் இருந்ததால் உறவினர்கள் அவர் இறந்து விட்டதாக நினைத்தனர்.
இதனையடுத்து உறவினர்கள் சண்முகத்தின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து வைத்துள்ளனர். அவரது மகன் சுப்பிரமணியன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தார். இதனால் சுப்பிரமணியன் மாலையை கழற்றி வைத்துவிட்டு தனது தந்தைக்கு பால் ஊற்றியுள்ளார். சிறிது நேரத்தில் திடீரென சண்முகம் எழுந்து உட்கார்ந்ததால் உறவினர்கள் ஆச்சரியத்துடன் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.