தம்மை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக கூறி தங்களிடம் 10 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற சிறுவனின் நாடகம் அம்பலமானது.
வாய்ஸ் ஆப் மூலம் கடத்தல்காரர் போன்று குரலை மாற்றி பேசிய சிறுவனை சிசிடிவி உதவியோடு போலீசார் பிடித்தனர். சென்னை திருவல்லிகேணியில் வசிக்கும் பலராம் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது மகன் கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டைவிட்டு வெளியே சென்ற மகன் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை அப்போது பலராம் செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை கடத்திவிட்டதாகவும், 10 லட்ச ரூபாய் தந்தால்தான் விடுவிப்போம் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். பதறிப்போன பலராம் மகனை மீட்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடத்தல்காரர்களை போலீசார் கண்காணித்த போது மறுபடியும் அழைப்பு ஏதும் வரவில்லை. சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது ஓலா ஆட்டோ ஒன்றில் தனது நண்பனுடன் சிறுவன் ஏறி சென்றது தெரியவந்தது. ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்தபோது பேடிஎம் அருகே இறங்கியதாக ஆட்டோ ஓட்டுநர் தகவல் அளித்தார். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சிறுவனை மீட்டனர். எப்போதும் திட்டிக் கொண்டே இருக்கும் அப்பாவை பழிவாங்க கடத்தல் நாடகம் ஆடியதாக சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
செல்போனில் பதிவிறக்கம் செய்த வாய்ஸ் ஆப் பை பயன்படுத்தி குரலை மாற்றிப் கடத்தல்காரர்கள் போன்று பேசியதாகவும் அவன் கூறியுள்ளான். இதேபோன்று சென்னை கொளத்தூரில் தன்னை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக நாடகமாடிய ஐந்தாம் வகுப்பு சிறுவனும் பிடிபட்டுள்ளான். பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள நண்பனை பார்க்க வந்த இடத்தில் நேரமாகி விட்டதால் தந்தைக்கு பயந்து கடத்திவிட்டதாக கூறியதாக அந்த சிறுவனும் தெரிவித்துள்ளான். இரண்டு சம்பவங்களும் பெற்றோர்களுக்கு பயந்து சிறுவர்கள் கடத்தல் நாடகத்தை ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.