தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், மனைவி பத்மாவதி. இவர்களுக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார் செல்வராஜ். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் சென்ற வருடம் காலமானார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மனைவி பத்மாவதி மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார்.
மகளுக்கு திருக்கோவிலூரைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் மகேஸ்வரி தந்தை மீது கொண்ட பாசத்தால் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தந்தை உயிருடன் இல்லையே என சோகத்தில் இருந்து வந்தார். மகளின் நிலையை பார்த்த பத்மாவதி குடும்பத்தினர் உதவியுடன் சிலை வடிவமைப்பாளர் மூலம் ரூபாய் 5 லட்சம் செலவில் செல்வராஜின் மெழுகுச் சிலையை வடிவமைத்தார்கள். இதையடுத்து நேற்று முன்தினம் மகேஸ்வரிக்கு திருமணம் நடந்தபோது மன மேடையின் முன்பாக போடப்பட்டிருந்த சோபாவில் செல்வராஜின் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருந்தது. மணமக்கள் செல்வராஜ் சிலையின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்.