சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு.
பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனது முதல் முன்மாதிரி அவரது தந்தையாக மட்டுமே இருக்க முடியும். பெற்றெடுத்த பிள்ளையை சீராட்டி வளர்த்து, நல்ல ஒழுக்கம் கற்பித்து, கல்வியை போதித்து, தன்னைவிட சிறந்தவராய் உயர வேண்டும் என நினைக்கும் எண்ணம் படைத்தவரே தந்தை.
தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை நெஞ்சில் சுமந்து, அதனை வெளிக்காட்டாமல் இருப்பது தான் தந்தையர்களின் தனிச்சிறப்பாகும். தந்தைகளை கவுரவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையன்று சர்வதேச தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த நாளில் மட்டுமின்றி பிற நாட்களிலும் தங்களுக்காக செய்த தியாகங்களையும் பட்ட துயரங்களையும் எண்ணிப்பார்த்து பிள்ளைகள் நடந்து கொள்வதே தந்தைக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதையாக இருக்கும். அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.