தந்தை மற்றும் மகனை தாக்கிய குற்றத்திற்காக காவல்துறையினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித்குமார் தான் நடத்தி வரும் ஒர்க்ஷாப்பில் பின்பகுதியில் இரும்புக் கம்பிகளை வாங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேஷ், ராஜேஷ் ஆகியோர் இணைந்து பழைய இரும்பு கடையில் போடுவதற்காக அந்த கம்பிகளை எடுத்து சென்றுள்ளனர்.இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் நான் வாங்கி வைத்த இரும்பு கம்பியை ஏன் கொண்டு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரஞ்சித்குமார் மற்றும் அவரது தந்தை சேகர் ஆகியோரை வெங்கடேஷ் உள்பட 7 பேர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சேகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ரஞ்சித்குமார் அளித்த புகாரின்பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.