சேலம் மாவட்டத்தில் உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியில் அழகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அழகுராஜை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அழகுராஜ் கூறியதாவது, கடந்த 2002-ஆம் ஆண்டு எனது தந்தை சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார்.
இதனையடுத்து 1 லட்ச ரூபாயை கட்டிய நிலையில் 2008-ஆம் ஆண்டு திடீரென எனது தந்தை உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாரிகள் கடனை செலுத்த வலியுறுத்தி பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தற்போது வரை அசலும், வட்டியும் சேர்த்து 7 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். இல்லை என்றால் வீட்டை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாக அழகுராஜ் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.