ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்களை பால் அட்டைதாரர்களிடம் கேட்கின்றது என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்கள் இடமிருந்து கேட்கின்றது என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ஆவின் நிர்வாகம், பால் அட்டை மூலம் பால் வாங்குபவர்கள் இடம் ஆவின் நிர்வாகம் அட்டைதாரர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு காலம்தான் ஆவின்பால் வாங்குகிறீர்கள் என்ற தகவல்களையும், ஆதார் எண், குடும்ப அட்டையின் வருமான வரி, நிரந்தர கணக்கு எண், ஓட்டுநர் உரிம எண், வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று போன்ற விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் தான் அடுத்த மாதம் முதல் பால் அட்டை வழங்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆவின் நிர்வாகம் எதற்காக இத்தனை விவரங்களை கேட்கின்றது என்பதை குறித்து தெளிவு படுத்தாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆவின் பால் அட்டைகள் கேட்பவர்கள் அனைவருக்கும் அதை வழங்க வேண்டும். பால் அட்டை தாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மறைமுகமாக ஆவின் நிர்வாகம் செயல்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.