பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம் தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி பார்த்த போது தன்னுடைய மனைவி ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து முப்புடாதியன் சடலத்தை கைப்பற்றி உள்ளனர். பின்னர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியின் நண்பர்களான பிரேம்(35) மற்றும் துர்க்கைமுத்து(20) ஆகியோர் முப்புடாதியை சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், முத்துப்பாண்டி மற்றும் பிரேமுக்கு இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் குடிபோதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றியதால் அங்கு வந்த முப்புடாதி பிரேமை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்த முன்விரோதம் காரணமாகவே பிரேம் மற்றும் துர்க்கைமுத்து கொலை செய்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.