ஓசூர் அருகே தனியார் ஊழியரை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் என்பவர் அசோக் லேலண்ட் இல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சாலையோர கடையில் சாப்பிட்டு சென்ற அவரை இரண்டு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்கள் பைக்கில் கர்நாடக மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இரு இளைஞர்களை வரவழைத்து காரில் அவரை ஏற்றி பணம் கேட்டு புஷ்கர் பால்சிங் தாக்கியுள்ளனர். புஷ்கர் மொபைல் போனில் இருந்து 5 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை தங்கள் வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டனர். பின்னர் கடந்த 9ஆம் தேதி மைசூர் ஊட்டி சாலையில் புஷ்கரை இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் புஷ்கர் ஓசூர் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை கும்பலை கைது செய்தனர்.