தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுமில்லாமல் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் சென்னை மாநகராட்சி சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணியாற்றுவோருக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்குவதால், அதிக அளவில் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக 50% ஊழியர்களுடன் சுழற்சி முறையில் அலுவலகங்களை இயக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.