Categories
மாநில செய்திகள்

தனியார் நிறுவனங்கள்: இனி 80 % வேலைவாய்ப்பு தமிழருக்கு?…. சீமான் வெளியிட்ட அறிக்கை….!!!!

தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே கொடுக்க அரசு உடனே தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “ஓசூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம், பணித் தேவைக்காகச் சிறப்பு ரயில் வாயிலாக 800 இளம்பெண்களை ஜார்க்கண்டில் இருந்து அழைத்துவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் வளங்களை மூலதனமாகக் கொண்டு, தமிழக அரசின் தயவில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் பணிக்கு மட்டும் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப் பறிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.

மேற்கு மாவட்டங்களில் சென்ற சில வருடங்களில் வேலைவாய்ப்புகளுக்காக குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 கோடிக்கும் அதிகம். சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் ஆகிய தொழில் நகரங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும் போக்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குடியேறும் வடவர்கள் பற்றி அரசிடம் என்ன தரவுகள் உள்ளது. அத்துடன் தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினை கட்டுப்படுத்த தி.மு.க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?.. தமிழகத்திற்கு வருகிற பிற மாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டினை தி.மு.க அரசு இதுவரையிலும் நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்..?

எனவே தமிழக அரசு ஆந்திரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைமுறையில் இருப்பதுபோல் தனியார் நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன். இனி தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள் நுழைவுச் சீட்டினை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் அவர்கள் தமிழகத்தில் குடும்பஅட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை பெறுவதற்கு உரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று தமிழக அரசினை கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |