15 லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு நேரு நகரில் நிலம் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டார். இந்நிலையில் பீளமேட்டில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாத்(37) என்பவரை கார்த்திகேயன் அணுகியுள்ளார். அப்போது நேரு நகரில் நிலம் விற்பனைக்கு இருப்பதாக ஜெகநாத் கூறியுள்ளார். அந்த நிலத்தை நேரில் பார்வையிட்டு கார்த்திகேயன் நிலத்தை வாங்கி தருவதற்காக ஜெகநாத்திடம் 15 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
ஆனால் பணத்தை வாங்கி கொண்டு நிலத்தை கார்த்திகேயனின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க காலம் தாழ்த்தியதாக தெரிகிறது. மேலும் பலமுறை கேட்டும் ஜெகநாத் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் கார்த்திகேயன் ஜெகநாத் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 8-ஆம் தேதி ஜெகநாத் பள்ளி ஆசிரியரிடம் 30 லட்சம் நில மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.