தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் என கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தஞ்சையில் இதுவரை ஆறு பள்ளிகளில் உள்ள மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சையில் கடந்த 4 நாட்களாக பல பள்ளிகளில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி வருவதால், அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார். அதன்படி அரசு அறிவித்த குற்றத்தடுப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ரூ.12,000, தஞ்சை தனியார் பள்ளிக்கு ரூ.5000 அபராதம் விதித்து, வழக்குப் பதிவு செய்ய ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.