சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி மர்ம சாவிற்கு நீதி கேட்டும் அவரது சாவிற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் போராட்டம் நடைபெற்று உள்ளது. இந்த போராட்டத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மாணவர் அமைப்பினர் பள்ளி வளாகத்தை சூறையாடி பஸ்ஸுக்கு தீ வைத்துள்ளனர். மேலும் அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியுள்ளனர். இதனால் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் காயமடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கலவரமாக மாறி உள்ளது.
இந்த சூழலில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தொண்டங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பிற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை மேற்கொண்டார். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துதால் அதிரடிபடையினர் வரவழைக்கப்பட்டனர். போலீசாரை கண்டதும் மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்று கழுதூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக போலீஸ் டிஐஜி சரவண சுந்தர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி கணேசன் போன்றோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அவர்களை கலைந்து போக செய்தனர். மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு அடுத்தடுத்து இரண்டு இடங்களில் நடந்த சாலை மறியலால் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.