தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச்சு 23ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை என்பது குழப்பமாக இருக்கிறது. ஒருபுறம் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பதாக கூறி அதற்கான நடைமுறைகளையும் ஆரம்பித்துவிட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தற்போது தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்றை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை உறுதியாக கூற முடியவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு சம்மந்தமாக முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்குவது எப்படி என்பது குறித்து தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.