தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்பது. இதனையடுத்து தனியார் பேருந்து ஒன்றிலும் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு விளம்பரம் ஒன்று வைரலாகி வருகிறது. மகளிர் பயணம் செய்ய கட்டணம் இரண்டு ரூபாய் என்றும், ஆண்கள் பயணம் செய்ய கட்டணம் 10 ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.