மிதிவண்டியில் பள்ளி சென்ற சிறுவன் தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான் ..
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 14 வயதுடைய கார்த்திக் என்ற மாணவன் பள்ளிக்கு மிதிவண்டியில் செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை மிதிவண்டியில் பள்ளிக்கு செல்லும் வழியில் காமராஜர் சாலை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் போது ,அதே சமயத்தில் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த தனியார் மினி பேருந்து ஒன்று சிறுவனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்ததும் பேருந்தின் சக்கரம் தலையின் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான் .
இதையடுத்து பேருந்து ஓட்டுநர் நடந்தது தெரியாதது போல் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் சம்பவ இடத்தில் இருந்த பள்ளி மாணவர்கள் விரட்டிச்சென்று சிக்னலில் மடக்கிப்பிடித்தனர் . பின்னர் சிவகாஞ்சி காவல் துறையினர் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.