தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் குறித்த விதி முறைகளை தேசிய மருத்துவ ஆணையம் மாற்றியுள்ளது. அதன்படி தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 50% இடங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் 50 சதவிகிதம் மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மட்டுமே தனியார் கல்லூரிகளிலும் வசூலிக்க வேண்டும். அதோடு குறிப்பிட்ட கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு கீழ் இருந்தால் தகுதி அடிப்படையில் மீதமுள்ள மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும் என மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.