அமைச்சர் கே.என். நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் இன்று மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக 69-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் கே. என். நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அமைச்சர் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு கேடயங்களை வழங்கினார். மேலும் பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய கால கடன், கால்நடை வளர்ப்பு கடன், சுய உதவிக் குழு கடன், வீட்டு அடமான கடன், சம்பள சான்று கடன் உள்ளிட்ட பல்வேறு கடங்கள் பெற்ற 1,365 பயனாளிகளுக்கு 8.90 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். இதனையடுத்து அவர் கூறியதாவது. நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நிலையில் நகராட்சி நிர்வாக துறையும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னையில் 2 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கியது.
அதுவும் வருங்காலங்களில் சரி செய்யப்படும். இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா கிடைக்கவில்லை. அது குறித்து நாங்கள் முதலமைச்சரிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். மேலும் கூட்டுறவு சங்கங்களில் பழைய முறைப்படி விவசாயிகளுக்கு கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி அடிப்படை பணிகளுக்கு அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த ஆணை மறுபரீசிலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.