அசாம் மாநிலம் பிரம்மபுத்திரா மணல் படுகையில் தனி ஆளாக ஒரு காட்டையே உருவாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோன்று ஒருவர் நம் தமிழகத்திலும் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் எப்போதும் மோசமாகவே சித்தரிக்கப்படும் தர்மபுரி மாவட்டத்தில். அதாவது பியூஸ் மனுஷ் என்பவர் தனி ஆளாக 200 ஏக்கர் காட்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இது தொடர்பாக பியூஸ் மனுஷ் கூறியதாவது “1997-ல் முதல் முறையாக மரம் நட ஆரம்பித்தேன். அவ்வாறு மரம் நடும்போது ஒரு விஷயத்தை மனதில் ஆழமாகப் புரிந்து கொண்டேன். காலை வேளையில் 5 மணி முதல் 8 மணி வரையிலும் ஒரு மலைமேல் சென்று மரம் நடுவேன்.
தினசரி இவ்வாறு நான் செய்து வந்தேன். இவ்வாறு செய்வதால் என் உடம்பிற்கு நன்றாக இருக்கும், சுற்றுச்சூழல் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அப்போது நான் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். அதாவது நான் மரம் நடும்போது கொசுவலை பிஸினஸ் செய்து வந்தேன். அந்த பிஸினஸை விட்டுவிட்டு நான் முதல் முறையாக ஒரு பசுமைத் தொழில் பாக்கு மட்டை தட்டு தயாரிக்க ஆரம்பித்தேன். அந்த பாக்கு மட்டை தட்டு தயாரித்ததில் ஒரு பெரிய அனுபவம் என்னவென்றால், அது தர்மாகோல் விட சீப்பாக இருந்து நல்ல பொருளாக இருப்பதால் நல்ல விலைக்கு போனது. அப்போது நான் யோசனை செய்தது என்னவென்றால் காடு உருவாக்க வேண்டும் என்பதே ஆகும். இதுவே ஒரு நல்ல தொழிலாக மாற்றினால், மக்களே தானாக ஏகப்பட்ட காடுகளை உருவாக்கி விடுவார்கள்.
2007இல் இந்த பயணம் தொடங்கி ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் மூங்கில் நட்டோம். சிறுவாலை மூங்கில் என்பது ஒரு நல்ல பயிராகும். அது தண்ணீரும் அதிகமாக ஈர்க்காது. அவ்வாறு சிறுவாலை மூங்கிலில் ஆரம்பித்த ஒரு பயணம் நல்லபடியாக சென்று கொண்டு இருந்தது. இதையடுத்து 2009-ல் என் நண்பர்களை இங்கு அழைத்து வந்து காண்பித்தேன். அதன்பின் மழை நீரை சேமிக்க எங்களது முழு உழைப்பையும், பணத்தையும் போட்டோம். இது எங்களுக்கு ஒரு அற்புதமான காட்சி ஆகும். கடந்த 2014 ல் மிகமிகக் குறைவாக மழை பெய்தது. அப்போது மழைநீர் சேமிப்பு பற்றி உள்வாங்கிக் கொண்டோம். அதனைத் தொடர்ந்து 2014இல் இருந்து மழைநீர் சேமிப்பு மூலம் இந்த காட்டில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஒரு உழைப்பினால் மழைநீர் சேகரிப்பும் அதிகரித்தது.
இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் என்னுடைய நண்பர்களிடம் இருந்து பணம் கேட்டேன். அதாவது உங்களுடைய பணத்தை இதில் இன்வெஸ்ட் பண்ணுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். இந்த காட்டை உருவாக்குவதற்கு பணத்தை போடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். மூங்கில் நட்டதில் இருந்து 2011-க்கு பின் 3 வருடம் கடுமையான ஒரு வறட்சி. அந்த நிலையில் நிறைய மூங்கில் செத்துப் போய்விட்டது. எனினும் குறிப்பிட்டு ஒரு மூங்கில் சாகவில்லை. அதன்பின் தண்ணீர் வந்தபின் அந்த மூங்கில் எல்லாம் தற்போது வளர்ந்து கொண்டிருக்கிறது.
அவ்வாறு மூங்கில் வளர தொடங்கியவுடன் மண்ணின் தரமும், தண்ணீருடைய தரமும் மிகவும் அதிகமாகி விட்டது. மூங்கில் மரத்தை இங்கிருந்து அறுவடை செய்து பக்கத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இறக்குமதி செய்து, 1 லட்சம் ரூபாய் இன்வெஸ்ட் செய்து 15-20 பேர் வரையிலும் வேலைவாய்ப்பு கொடுக்க முடிந்தது. இவ்வாறு காடுகளை உருவாக்குவதன் மூலம் இயற்கையை பாதுகாப்பது மட்டுமல்லாமல், இயற்கையோடு இணைந்து தொழிலையும் வளர்க்க முடியும்” என்று பியூஸ் மனுஷ் கூறுகிறார்.