தனுஷ், அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தில் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தில் தனுஷ் வாய்பேசாத கலைஞனாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள அத்ரங்கி ரே படத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அத்ரங்கி ரே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்துடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.