கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவராஜ்குமார். இவர் இப்போது முதன் முறையாக தமிழிலும் நடிப்பதற்காக அடியெடுத்து வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாவிட்டாலும், தன் பேட்டி ஒன்றில் இதுபற்றி சிவராஜ்குமாரே வெளியிட்டு உள்ளார். அதனை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவராஜ்குமார் நடிக்க இருக்கிறார்.
இது பற்றி ஏற்கனவே யூகமான தகவல்கள் வெளியான சூழ்நிலையில் அது உண்மைதான் என்பதை பேட்டி ஒன்றில் சிவராஜ்குமார் வெளிப்படுத்தியுள்ளார். அதன்பின் சிவராஜ்குமார் கூறியதாவது, அருண் மாதேஸ்வரன் பெங்களூருக்கு வந்து என்னிடம் இந்த கதை தொடர்பாக 40 நிமிடங்கள் விரிவாக பேசினார். அந்த கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அத்துடன் நான் தனுஷின் மிகப் பெரிய ரசிகன். அவரது அனைத்து படங்களையும் பார்த்துள்ளேன்.
சொல்லப் போனால் தனுஷில் என்னை நான் பார்க்கிறேன். அவரது அந்த குறும்புத் தனம், நண்பர்களிடம் அவர் நடந்துக்கொள்வது அனைத்தும் பார்க்கும்போது அவர்தான் நான்.. நான் தான் அவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. இதன் காரணமாக அவர் மீது எனக்கு தனியாக ஒரு விருப்பம் எப்போதுமே உள்ளது. அந்த அடிப்படையில் இப்படி தனுஷ் உடன் இணைந்து நடிக்க தேடிவந்த அந்த வாய்ப்பை நான் தவறவிட விரும்பவில்லை. இப்படம் வெளியாகும்போது தனுஷுக்கும் எனக்குமான பிணைப்பை ரசிகர்கள் கண்டிப்பாக புரிந்துகொள்வார்கள் என்று அவர் கூறியுள்ளார்.