சென்னைமதுரவாயல் கிருஷ்ணாநகர் 1-வது தெருவில் வசித்து வரும் சதீஷ்குமார் பாஜகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டபோது அதில் ஒரு மர்மநபர் வண்டியின் முன்பின் பக்கமாக பெட்ரோல் நனைத்த துணியால் காரின் நான்கு பக்கமும் துடைத்து பின், காரை தீ வைத்து கொளுத்துவது அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் தெளிவாக பதிவாகியிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது முதற்கட்டமாக சதீஷ்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த காவல்துறையினர் சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, தன் காருக்கு தானே தீ வைத்ததாக ஒப்புக்கொண்டார். அதாவது இந்த காரை விற்று நகை வாங்கித் தரும்படி அவரது மனைவி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் காரை எரித்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 285-ன் தீப்பற்றக்கூடிய பொருட்களை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தே மெத்தனமாக கையாளுதல் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.