சுய சார்பை பற்றி வார்த்தை ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு ஒட்டு மொத்த அரசையும் தங்களின் கோடீஸ்வர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் ஆறு லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமாக்கும் வகையில், தேசிய பணமாக்கும் திட்டத்தை நேற்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்தை பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசு அனைத்து பணிகளையும் தனது கோடீசுவர நண்பர்களுக்காக செய்து வருகிறது, தற்போது அனைத்து சொத்துகளும் அவர்களுக்குத்தான். கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அரசின் மூலமாக தங்களின் கோடிஸ்வரன் நண்பர்களுக்கு வாரி வழங்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார். சுயசார்பு என்பதை பற்றி ஜாலமாக பேசி வரும் மத்திய அரசு, ஒட்டுமொத்த அரசையும் தங்கள் கோடீஸ்வர நண்பர்களை சார்ந்து இருக்கும் வகையில் மாற்றி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.