மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசா்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. தங்க பத்திரம் விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடக்கிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,790. சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தியாகராயநகா், மயிலாப்பூா் தலைமை தபால் நிலையங்கள், 22 துணை தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை நடைபெறுகிறது.
தங்கம் பத்திர வடிவில் இருப்பதால் , பாதுகாப்பாக இருக்கும். ஒருவா் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்கலாம்.மேலும், முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளா் கணக்கில் செலுத்தப்படும். 8 ஆண்டுகள் கழித்து முதிா்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகராக பணமும் கிடைக்கும்.
தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவா்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் காா்ட் கட்டாயம். ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்க பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.