நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது, முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 பேர் நிழல் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒன்று சபரீசன். மற்றொன்று உதயநிதி.
இதுதான் திராவிட மாடலா? ஜி. ஸ்கொயரை அனைத்து ஊர்களிலும் தற்போது கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் 1 கோடி ரூபாய்க்கு பெறப்பட்டு 10 கோடி வரை வியாபாரம் செய்கின்றனர். இதுதான் திராவிட மாடலா? முதலமைச்சர் என்ற அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் இதை தட்டிக் கேட்க வேண்டாமா? திமுக கட்சியை பொறுத்தவரை அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முதல்வராக வர முடியாது.
ஆனால் அதிமுக கட்சியில் அடிமட்ட தொண்டனும் பொதுச் செயலாளராக மாறலாம் என்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி உதாரணம். பண்ருட்டி ராமச்சந்திரன் யார் என்பதே பலருக்கு தெரியாது. அரசியல் அனாதைகள் எல்லாம் அதிமுகவை பார்த்து கொக்கரிக்கின்றனர். பண்ருட்டி ராமச்சந்திரன் முஸ்லிம் லீக் மற்றும் பாஜக கட்சியை தவிர மற்ற எல்லா கட்சிக்கும் சென்றுவிட்டார்.
எடப்பாடி பழனிச்சாமி மட்டும் இல்லை என்றால் 66 சட்டமன்ற உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்குமா? பாஜக கட்சியின் மூத்த தலைவராக அத்வானி இருக்கிறார். ஆனால் தற்போது மோடி பிரதமராகியுள்ளார். மோடி அத்வானியின் சீடர் எனவும் மோடி பிரதமர் ஆனதால் அத்வானி டெல்லிக்கு சென்று கட்சி அலுவலகத்தை அடித்து உடைத்தாரா என்று ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடினார். அடிமட்ட தொண்டர்களால் அமைக்கப்பட்ட அஸ்திவாரத்தை யாராலும் அசைக்க முடியாது என்றார்.