தமிழகத்தில் பல இடங்களில் அதிரடி சோதனையை தேசிய புலனாய்வு முகமை தொடங்கியது. அது குறித்த வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கரும்பு கடையிலுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அந்த சோதனைக்கு பின் அவரை கைது செய்த அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். வெளிநாடுகளிலிருந்து பணம் வருவது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீர் சோதனை காரணமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனை நடத்தப்படும் இடங்களில் பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எஃப் காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.