கண்களை மட்டும் குறி வைத்து கடிக்கும் வினோத வகை எறும்புகள் திண்டுக்கல் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை பகுதி பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மலைப்பகுதியை சுற்றி வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி, உலுப்பக்குடி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவி வந்தது. நாளடைவில் இந்த எறும்புகள் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் பரவியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எறும்புகள் கிராமப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. இந்த எறும்புகள் மனிதர்கள் மீது வேகமாக ஏறி கண்களை மட்டும் கடிப்பதாக தெரிவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த எறும்புகள் உடல் மீது ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றது. இது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். எறும்பு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றது.
உலகின் முதல் 100 ஆபத்தான உயிரினங்களில் இந்த எறும்புகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். மேலும், காடுகளில் கம்பளி பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் ஈக்கள் எண்ணிக்கை இந்த எறும்புகளால் குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.