தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என்றும், டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மாறி, வரும் நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.