தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
ரயில் மற்றும் விமான சேவைகளை தற்போதைக்கு தொடங்கக் கூடாது, மாநிலங்களுக்கு இடையில் பயணிகள் போக்குவரத்தையும் தற்போது அனுமதிக்கக் கூடாது என்றும் பருப்பு, மசாலா பொருட்கள் மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் விநியோகிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் வேளாண், தோட்டக்கலைத்துறைக்கு சிறப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அமைப்பு சாரா தொழிலாளர்கள்குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். முன்னதாக முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க கூடுதலாக ரூ. 3000 கோடி தேவை என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். மேலும் 2020-21ம் ஆண்டுக்கான மாநில நிதியை முன்னதாகவே வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.