நீட் சட்ட முன்வரைவிற்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான மொழிப் போராட்டம் என்பது நீண்ட நெடும் பயணம் ஆகும். தந்தை பெரியார் தொடங்கி சோமசுந்தர பாரதியார் வரை அத்தனை மொழி போராட்ட தியாகிகளின் தியாகங்களையும் தாண்டி தற்போது வரை மொழிப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பண்டித நேரு அவர்கள் விருப்பம் இல்லாத பட்சத்தில் இந்தி மொழியை தமிழகத்தில் திணிக்க மாட்டோம் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்பின்னர் 1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறுவப்பட்டது. தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை மட்டுமே நடைமுறையில் இருந்தது. இந்த இரு மொழி கொள்கையால் தமிழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பிலோ மாணவர்களுக்கு கிடைக்க பெற்ற அறிவிலோ எந்த குறைவும் ஏற்படவில்லை.
நீட் தேர்வு என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தாத ஒன்றாகும் குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிக்க இயலாமல் தங்களுடைய பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து எப்படியேனும் மருத்துவத்துறைக்கு நுழைந்து விடலாம் என கனவு கண்டு அந்த கனவினை நிறைவேற்ற போராடும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வால் மருத்துவம் என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. எனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி சட்ட மன்றத்திலும் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமென தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.