தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களுக்கு பிறகு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இந்த மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தொற்று பரவல் குறையும் பட்சத்தில் முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படாது என்று நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, கோவை, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து அரசு திட்டமிட்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நான்கு மாவட்டங்களிலும் திரையரங்கு மூடுவது, கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு, பொது போக்குவரத்து கட்டுப்பாடு, இந்த மாவட்டங்களுக்கு வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்ட ஊரடங்கு கட்டுபாடுகள் தொடர்பாக வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே அந்த ஆலோசனையின் போது இந்த கட்டுப்பாடுகள் குறித்து விவாதம் மேற்கொள்ளப்படலாம்.