வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 16 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல்,தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.