தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர் களுடன் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களில் அதிக வாடகை வசூலிப்பது தொடர்பாக சீராய்வு செய்ய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வாடகை நிர்ணயிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து சொத்து வரி உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்திற்கு 5 லட்சம் கோடி கடன் சுமை அதிகரித்துள்ளது. ஒரு நாளிற்கு 23 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழல் உள்ளது. கடந்த 23 ஆண்டுகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
சொத்து வரி உயர்வை என்பது ஒரு கசப்பான மருந்து தான். மக்களுக்கு இது சிரமத்தை ஏற்படுத்தினால் முதல்வர் பரிசீலனை செய்து இதுகுறித்து முடிவெடுப்பார். ஐந்தாவது நிதி ஆணையத்தின் அறிவுறுத்தலின் பெயரில் தமிழகத்தில் உள்ள நகர்புறங்களில் 25 சதவீதம் முதல் 100% வரை சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்ததால் இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.