தமிழகத்திலும் ஊரடங்கு முடிவை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்புக்கான ஊரடங்கு உத்தரவு 18 நாட்களை கடந்த நிலையில் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு ஆதரவு தொடரும் என மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். மக்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்,
கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை – எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக சார்பில் எனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக்கூட மத்திய அரசின் கண் அசைவிற்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
பரிசோதனை செய்யப்பட்ட எண்ணிக்கை, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை, இறப்பு எண்ணிக்கை, போன்றவற்றில் ஒளிவு மறைவு சிறிதுமின்றி வெளிப்படைத்தன்மை வேண்டும். அப்போதுதான் நம்பகத்தன்மை அதிகரிக்கும். முக்கியமான இந்த எண்ணிக்கைகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் உள்ளன என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தனித்திருத்தல் என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஏற்கனவே ஒடிசா முதல்வர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், பஞ்சாப் மாநில முதல்வர் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள். ஆகவே தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.