தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் பங்கேற்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதன் காரணமாகி அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா தேரோட்ட விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நேற்று (பிப்.14) நடைபெற்றது. இதையடுத்து இன்று(பிப்..15) இரவு 7.30 முதல், 9.00 மணிக்குள் பூச்சாட்டு விழா நடைபெற இருக்கிறது. அதன்பின் பிப்ரவரி 23- 28 வரை தினசரி ஒரு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும். மார்ச் 2ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இருக்கிறது.
அதனை தொடர்ந்து இறுதி நிகழ்வாக மார்ச் 7ஆம் தேதி வசந்த விழா நடைபெறும். இந்த திருவிழாவின் தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த வருடம் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பக்தர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேரோட்ட நிகழ்ச்சியில் வெளிமாவட்ட மக்கள் பங்கேற்கக் கூடாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்..