தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கடற்கரை அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று முழுவதும் நகர வாய்ப்பு குறைவு. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் கொடுத்த மழையை விட புரெவி புயல் அதிக மழையை கொடுத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். அதனால் அடுத்த 2 நாட்களுக்கு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.