தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.