வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது வலுவிழந்து வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக தற்போது நிலவி வருகிறது..
இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 தினங்களுக்கு தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றைய தினம் முன்னறிவிப்பின் படி வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
அதேபோல 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை 4 நாட்களுக்கான முன்னறிவிப்பில் தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது.. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை.. தமிழகத்தை பொறுத்தவரை தற்பொழுது கடற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அடுத்து வரக்கூடிய ஒரு வாரத்திற்கு சற்று குறைவாக இருக்கும்..
எனவே தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடிய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு அந்தமான் கடலோர பகுதியை ஒட்டிய புதிய மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக இருக்கிறது. இந்த வளிமண்டல மேடுக்கு சுழற்சி என்பது அடுத்து வரக்கூடிய நாட்களில் தொடர்ந்து கடலில் அதற்கான சாதகமான சூழல் நிலவும் பட்சத்தில் இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி மீண்டும் தமிழகத்திற்கு மழை தருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.