சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும் என அறிவித்திருந்தது. இதனையடுத்து நாளை முதல் 11-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்பிறகு சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், ஈரோடு, மதுரை, புதுச்சேரி, தேனி, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நீலகிரி, வேலூர் போன்ற மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் லேசான மற்றும் மிதமான மழை பெய்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.