தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “மழையின் காரணமாக கடந்த இரண்டு நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது. இரண்டு மணிநேரம் மட்டுமே காற்றாலையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதைத் தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
மின்வாரியத்தின்2.o திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் என்ற நிலையை அடையும். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள காரணத்தினால் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஐந்து பிரிவுகளிலும் 1050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் காற்று ஓரளவுக்கு பலமாக வீசுகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.