தமிழகத்தில் கடந்த 2013-ம் வருடத்தில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சம் கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. மேலும் கூடுதலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூபாய் 12 ரூபாய் கட்டணம் என இருந்தது. அதுமட்டுமல்லாமல் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் என்றும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை 50 % கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெட்ரோல் விலையானது குறைவாக இருந்தது.
இப்போது பெட்ரோல் விலை ரூபாய் 100-ஐ கடந்து விற்கப்படுகிறது. எல்.பி.ஜி விலையும் ரூபாய் 67 என உயர்ந்துள்ளது. இதேபோன்று அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அரசின் பரிந்துரையை ஆட்டோஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதே நேரம் இப்போது அதிகமான ஆட்டோக்கள் தனியார் செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து “டிஜிட்டல் மீட்டர்” வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் தனியார் செயலிகளைவிட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நலவாரியத்தின் வாயிலாக ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையில் ஆட்டோக்களுக்கான மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பின் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கருத்துக்களை கேட்டுள்ள இணைபோக்குவரத்து ஆணையர் தலைமையிலான குழு, போக்குவரத்துதுறைக்கு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை பரிந்துரைத்து இருக்கிறது. அந்த வகையில் 1.5 கிலோ மீட்டருக்கு உள்ளான துாரத்துக்கு கட்டணமாக 40 ரூபாய் என்றும் கூடுதலான ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.