சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்து மாவட்ட அளவில் பத்திரிகையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தோழமை அமைப்பு, யூனிசெப் அமைப்புடன் இணைந்து நடத்திய அந்த பயிலரங்கினை யூனிசெப் அமைப்பின் தமிழக மற்றும் கேரள மாநில குழந்தைகள் பாதுகாப்பு நிபுணர் குமரேசன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய குமரேசன், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது மற்றும் குழந்தை திருமணம் தடுப்பில் ஊடகத்தினரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை முற்றிலுமாக தவிர்த்து செய்திகளை வெளியிடுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் குழந்தைகளின் உரிமை சார்ந்த நிகழ்வுகளை பிரபல படுத்த வேண்டும்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தை பொறுத்தவரை நடுத்தர குடும்பங்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்கள் குழந்தை திருமணங்களை நடத்துவதில் ஆர்வமாக உள்ளனர். இதுவும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையாக தான் பார்க்கப்படுகிறது. இதனை தடுப்பதற்கான சூழல் தற்போது நன்றாக அமைந்துள்ளது. இப்போதைய அரசு சமூக நலத்துறை அமைச்சர் இதில் ஆர்வமாக உள்ளனர். இந்திய அளவில் முதல்முறையாக ஒருங்கிணைந்த குழந்தை நல பயிற்சி மையம் ரூ.27 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் தேசிய அளவிலான சராசரியை விட 23.3% குழந்தை திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதை தடுப்பதற்கு ஊடகத்தினரும் தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு பேசிய சேலம் மாவட்டம் சமூகநல அலுவலர் ரஞ்சிதா தேவி, கடந்த 2021 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் குறித்து 253 புகார்கள் வந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களில் மட்டுமே 289 புகார்கள் வந்துள்ளது. கோவிட்க்கு பிறகு குழந்தைகள் திருமணம் அதிகரித்து உள்ளது. இதனை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 10,000 சுவர் விளம்பரங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவம், காவல்துறை, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரையும் ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணத்தில் தொடர்புடைய அனைவரையும் வரவழைத்து ஒரு நாள் முழுவதும் கலந்தாய்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட 48 பெண் குழந்தைகளுக்கு தையல் பயிற்சி, மென்திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.