தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே தனியார் மருத்துவமனைகள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி 24 மணி நேரத்தில் 68 பிரசவங்கள் நடந்தது. அதில் 60% சுகப்பிரசவம். 40% சிசேரியன். சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை அமைச்சர் வழங்கினார்.
அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,மாநிலம் முழுவதிலும் அரசு மருத்துவமனைகளில் 65% பிரசவம் நடைபெறுகிறது. 35 சதவீதம் தனியார் மருத்துவமனையில் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் 65 சதவீதமாக உள்ள சுகப்பிரசவம் தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமாக குறைந்துள்ளது. வெளிநாடுகளில் 80% சுகப்பிரசவம், 20 சதவீதம் மட்டுமே சிசேரியன் ஆக உள்ளது. தமிழகத்தில் முன்பெல்லாம் 100% சுகப்பிரசவமாக நடந்தது. ஆனால் தற்போது சுகப்பிரசவம் குறைந்து சிசேரியன் சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் நடைபெறுகிறது. எனவே அதனைத் தவிர்க்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு கடிதம் எழுத உள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.