சேலம் மாவட்டம் பேப்பர் அலாய்டு விற்பனையாளர்கள் சங்க செயலர் விஸ்வநாதன் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டிலிருந்து பேப்பர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டதை காரணம்காட்டி பேப்பர் விலையானது கடந்த 2021 பிப்ரவரி முதல் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பிரசித்திபெற்ற காகித ஆலைகளான டிஎன்பிஎல் சேசாய், பலார்பூர் ஜெ.கே. வேஸ்ட் கோர்ட்ஸ், ஆந்திரா பேப்பர் ஆலை போன்றவற்றுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தது. அது தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. காகித ஆலைகள் தங்களது தயாரிப்பு பேப்பர் உள்ளிட்டவற்றின் விலையை ஜனவரி 15 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி 2 மாதத்தில் பேப்பர் விலை டன்னுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சென்ற 2021 மார்ச்சில் நியூஸ் பிரின்ட் டன் 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது படிப்படியாக அதிகரித்து நேற்று 70 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கிராப்ட் பேப்பர் 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 80 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. பின் டூபிளஸ் 4 பேப்பர் டன் 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 70 ஆயிரம் ரூபாயாகவும், மேப்லித்தோ டன் 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 86 ஆயிரம் ரூபாயாகவும், ஹார்ட் பேப்பர் 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது 1.20 லட்சம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளன. இந்த விலை இன்று தொடங்கி ஏப்ரல் 1க்குள் மேலும் டன்னுக்கு 4000 – 7500 ரூபாய் வரையும் விலை உயர இருப்பதாக காகித ஆலைகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.
இவ்வாறு பேப்பர் விலை அதிகரிப்பால் திருமண அழைப்பிதழ் நோட்டீஸ், போஸ்டர், மாணவ – மாணவியர் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்கள் போன்றவற்றின் விலையை உயர்த்த தயாரிப்பாளர்கள் வியாபாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்” என்று அவர் கூறினார். அதனை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆப்செட் பிரின்டர்ஸ் அசோசியேஷன் செயலர் சீனிவாசன் கூறியிருப்பதாவது, காகித ஆலைகள் பேப்பரை சென்ற வருடம் இதே காலக்கட்டத்தில் விற்பனை செய்த விலையை விட 2 மடங்காக விலையை உயர்த்தியுள்ளன. அச்சுமைக்கு இடையில் கெமிக்கல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதனால் இத்தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலை தொடர வேறுவழியின்றி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அச்சகங்களிலும் பிரின்டிங் வேலைகளுக்கு 40% கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.