தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் பத்து பேருக்கு மேல் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த அளவிற்கு மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முக கவசம் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும். பேருந்துகளில் பயணிக்கும் போது கட்டாயம் பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்துதான் பள்ளிக்கு வர வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே மதுரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதிக்கும் படி முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் . இதனை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒருவேளை மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் அந்த மாணவரை உடனடியாக தனிமைப்படுத்தி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் கட்டுப்பாடு அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் மாணவர்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.