தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக போட்டி தேர்வு நடைபெறவில்லை. அதனால் 2022 ஆம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி தகுதி தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே மற்ற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது ஒமைக்ரான் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் போட்டித்தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தற்போது அரசு பணிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கூறியது, அனைத்து வகையான மாநில அரசு பணிகளுக்கு இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் மசோதா அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி ஆவின், மின்வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அமைப்புக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.