பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பிப்பது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் என்பதனால் மே மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கினால் தான் மாணவர்களுக்கு சீருடைகள், புத்தகங்கள் ஆகியவை வழங்குவது குறித்து திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும். கடந்த மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது கூட மே மாதம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. ஆனால் இப்போது கொரோனா இல்லாத சூழலிலும் கூட மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்குவதற்கு காரணங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அரசு பள்ளிகளில் இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மை குழு வினர் வீடு வீடாக சென்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல் பெரும் இயக்கமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.